நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சுட்டுக்கொலை

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் 12 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புதுவருட நாளினை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டார்.

பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய உள்வீதியை மகேஸ்வரன் சுற்றி வந்துகொண்டிருந்த போது முற்பகல் 9.55 மணியளவில் அங்கு நின்ற துப்பாக்கிதாரி ஒருவர் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தினார்.இதில் மகேஸ்வரனும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 2 பேரும், 7 பொதுமக்களும் காயமடைந்தனர். மகேஸ்வரனின் குடும்பத்தினருக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.மகேஸ்வரனையும் அவரது மெய்ப்பாதுகாவலர்களையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்த பொதுமக்களை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அங்கு அவர்கள் அனுமதிக்கப்படாததால் அவர்களையும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மருத்துவமனைக்கு மகேஸ்வரன் கொண்டு செல்லப்படும் போது மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்தார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சில நிமிடங்களில் சுமார் முற்பகல் 10.15 மணியளவில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.மகேஸ்வரன் உயிரிழந்ததை கொழும்பு மருத்துவமனைப் பேச்சாளர் சொய்சா உறுதிப்படுத்தினார்.
இது குறித்து அவர் கூறுகையில்,மகேஸ்வரன் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் மிகவும் ஆபத்தான நிலையிலேயே இங்கு கொண்டு வரப்பட்டார். அவரின் நெஞ்சுப்பகுதியில் பல குண்டுகள் துளைத்திருந்தன. அவரது தலைப்பகுதியையும் குண்டுகள் துளைத்திருந்தன. அவருக்கு உடனடியாக சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. எனினும் அது பலனளிக்காது அவர் உயிரிழந்தார் என்றார்.மகேஸ்வரன் உயிரிழந்த சிறிது நேரத்தில் காயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலரான காவல்துறையைச் சேர்ந்தவரும் உயிரிழந்ததாக மருத்துவமனை பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த பொதுமக்களில் இருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை ஐக்கிய தேசியக் கட்சி கடுமையாகக் கண்டித்திருக்கின்றது.இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில்,மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் குறைத்துக் கொண்டது அரசாங்கம். அதன் தொடர்ச்சியாகவே மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்.
நாடாளுமன்றத்திலும் வெளியிடங்களிலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்ததன் விளைவாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகின்றோம். கொலைச் சம்பவத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். அரசாங்கம்தான் அவரைப் படுகொலை செய்யும் உத்தரவை வழங்கியுள்ளது என்றார்.

சம்பவம் இடம்பெற்ற போது அங்கு வழிபாட்டில் நின்ற பொதுமக்கள் அல்லோலகல்லோலப்பட்டு சிதறி ஓடினர். மகேஸ்வரன் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்திய நபரை நோக்கி அவரது மெய்ப்பாதுகாவலர்களும் துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர் என்று கூறப்படுகின்றது.
தற்போது பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை "சக்தி" தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "மின்னல்" நிகழ்ச்சயில் கலந்துகொண்ட மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் படுகொலைகளுக்கு அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பியே காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.அதன் தொடர்ச்சியாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிற்கான பிரசாரத்தின் போதும் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னர் பிரபல வரத்தகரான இவர், யாழ்ப்பாணம் காரைநகரைச் சொந்த இடமாகக் கொண்டவர். இவருக்கு வயது 42.இலங்கையில் பெயர் குறிப்பிடத்தக்க வர்த்தகர்களுள் மகேஸ்வரனும் அடங்குவார். அவருக்குச் சொந்தமான நான்கு கப்பல்கள் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுட்டு வருகின்றன.ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு இருந்தபோது யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி இந்து கலாச்சார அமைச்சர் பதவியையும் மகேஸ்வரன் வகித்திருந்தார்.
இவரது நெருங்கிய சகாவான பேபியன் எனப்படும் முத்துக்குமார் சிவபாலன் கடந்த வருடம் டிசம்வர் மாதம் 21 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர் மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.கடந்த வருடம் நவம்பரில் கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மகேஸ்வரன், பாதிக்கப்பட்ட மக்களை திரட்டிக் கொண்டு பூசா தடுப்பு முகாமுக்கு சென்றதுடன் அரச தலைவரின் அலுவலகத்தை நோக்கி பேரணியாகவும் சென்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மகேஸ்வரனை நோக்கி துப்பாக்கிச் சூட்டினை நடத்திய நபரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருபக்பதாக தகவல்கள் தெரிவிக்கன்றன. எனினும் இதனை மருத்துவமனை நிர்வாகத்தினர் உறுதிப்படுத்த மறுக்கின்றனர்.மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இச்சம்பவத்தின் சூத்திரதாரி படுகாயமடைந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

0 பின்னூட்டம்(கள்):