தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமலே தீயுடன் சங்கமித்த அமரர் தியாகராசா மகேஸ்லரனுடைய பூதவுடல்

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் பூதவுடல் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் இறுதி அஞ்சலியுடன் வியாழக்கிழமை 6:30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

வெள்ளவத்தையில் உள்ள மகேஸ்வரனின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடலுக்கு இன்று காலை முதல் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

மகேஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் கூட்டம் அலை மோதியதால் பலர் பூதவுடலை நெருங்கி அஞ்சலி செலுத்த முடியாது அவதிப்பட்டனர்.

இதனையடுத்து இன்று மாலை 3:00 மணியளவில் அவரது பூதவுடல் தகனம் செய்வதற்காக பொரளை மயானத்தை நோக்கி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

வெள்ளவத்தையிலிருந்து மகேஸ்வரனின் பூதவுடலை தாங்கிய இறுதி ஊர்வலம் ஆரம்பமாகியதும், அவரது பூதவுடலை குடும்பத்தினரும், அவரது ஆதரவாளர்களும் பொறுப்பேற்றனர்.

மகேஸ்வரனின் பூதவுடலை அவர்கள் கைகளிலேயே தூக்கிச் சென்றனர். மயானம் வரை அவரது பூதவுடல் கைகளிலேயே ஏந்தி வரப்பட்டது.
வெள்ளவத்தையில் இருந்து ஆரம்பமாகிய இந்த இறுதி ஊர்வலம், கிருலப்பனை ஊடாக பேஸ்லைன் வீதிக்குச் சென்று அங்கிருந்து நாரஹேன்பிட்டி ஊடாக பொரளை மயானத்தைச் சென்றடைந்தது.
இறுதி ஊர்வலம் சென்ற வீதிகள் அனைத்திலும் இருந்த வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டிருந்தன. வீதிகளின் இருமருங்கிலும் மக்கள் திரண்டு நின்று பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இறுதி ஊர்வலம் பேஸ்லைன் வீதியை அடைந்ததும் மகேஸ்வரனின் பூதவுடலை ஐக்கிய தேசியக் கட்சி பொறுப்பேற்றுக் கொண்டது. தொடர்ந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மகேஸ்வரனின் பூதவுடலை பொறுப்பேற்று தமது கைகளில் ஏந்திச் சென்றனர்.

இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட பொதுமக்களும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் மகேஸ்வரனின் கொலையைக் கண்டிக்கும் பதாகைகளை தாங்கியிருந்தனர். பலர் தமது வாயைக் கறுப்புத் துணியால் கட்டியிருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், மதத்தலைவர்களும், ஊடகவியலாளர்களும் மகேஸ்வரனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

மகேஸ்வரனின் மகன் தந்தையின் பூதவுடலுக்கு தீயிட்டார்.

1 பின்னூட்டம்(கள்):

King... said...

செத்ததுக்கு பிறகு என்ன செய்து என்ன லாபம் அப்பு ஏதாவது செய்யோணும் எண்டு விரும்பினால் மகேஷ்வரன்ரை சாவுக்கான காரணம் யார் அதுக்கான சரியான பின்புலம் என்ன அவருட்டை இருந்த ஆதாரங்கள் என்ன இதையெல்லாம வெளிச்சம் போடலாமே.. வெளிச்சம் போட்டால் தெரியப்போறது எந்தெந்த பக்கங்களோ.... எல்லாம் வன்னிக்குத்தான் தெரியும்...
இன்னொணடு செய்யலாம் அரசும் வேண்டாம் அரசியலும் வேண்டாம் வாழ்வொன்றே போதும் என்று ஒட்டுமொத்த இலங்கையும் ஒரு முடிவெடுக்கலாம்...