300 தமிழர் பலி; பலநூறு பேர் படுகாயம்; கொலைப் பொறியாகும் "பாதுகாப்பு வலயம்": வன்னி மக்களை சிக்க வைத்து சிறிலங்கா படையினர் அகோர பீரங்கித் தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் - சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்கட்டு, வல்லிபுனம், ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை நடத்திய கண்மூடித்தனமான - அகோர பீரங்கி தாக்குதலில் ஆகக்குறைந்தது 300 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வன்னியின் நான்கு பெரும் மாவட்டங்களில் இருந்து துரத்தப்பட்டு - நான்கு சிறிய கிராமங்களுக்குள் தற்போது மிக நெரிசலாக முடக்கப்பட்டுள்ள நான்கு லட்சம் வரையான தமிழர்களை கொன்றொழிக்கும் நோக்கத்துடன் இந்த மிகச் செறிவான பீரங்கி தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்படுகின்றன.

சுதந்திரபுரம் சந்தி, உடையார்கட்டு ஆகிய பகுதிகளை நோக்கி இன்று திங்கட்கிழமை காலை 9:45 நிமிடம் முதல் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சுதந்திரபுரம் சந்தியில் பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் எறிகணைகள் ஐ.நா. தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மேற்பார்வையில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளன.

மூங்கிலாறு பகுதியில், பரந்தன் - முல்லைத்தீவு வீதியின், 3 கிலோ மீற்றர் நீளத்திற்கு பெருந் திரளாக இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்களை இலக்கு பீரங்கி தாக்குதல் நடாத்தப்பட்டதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்கள் சென்றுகொண்டிருந்த பல வாகனங்களும், வீதியோரம் இருந்த பல வீடுகளும் தீயில் எரிந்து நாசமாகின.

இதேவேளை - உடையார்கட்டு பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனையும் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகி ஏற்கனவே காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் மருத்துவமனையின் 4 நோயாளர் காவு வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் காயமடைந்தோரை எடுத்து வருவது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் வீழ்ந்து கிடந்தோரில் பெருமளவிலனோர் கைக்குழந்தைகளும் சிறுவர்களும் ஆவர் என "புதினம்" செய்தியாளர் சம்பவ இடத்தில் இருந்து தெரிவிக்கின்றார்.

இன்றைய இனக்கொலைத் தாக்குதல்களில் மட்டும் 300 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் ஒருவரும் "கியூடெக்" நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் உட்பட பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த கண்மூடித்தனமான இனக்கொலைத் தாக்குதல் பற்றிய இந்தச் செய்திகள் - தமது வன்னிச் செய்தியாளரை மேற்கோள் காட்டி "தமிழ்நெட்" இணையத்தளம் வெளியிட்ட செய்திகளில் இருந்தும், எமது வன்னிச் செய்தியாளர் அனுப்பிய செய்திகளிருந்தும் தொகுக்கப்பட்டவையாகும்.

சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்கள் - மிகக் கொடூரமாக பொதுமக்களை நோக்கி அதிகரித்து வருவதால் - இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாக அதிகரிக்கலாம் என "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

0 பின்னூட்டம்(கள்):